VHP விழாவில் சர்ச்சை பேச்சு - கொலீஜியம் முன் ஆஜராகி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விளக்கம்!
விஸ்வ ஹிந்து பரிஷத் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் உச்சநீதிமன்ற கொலீஜியம் முன் ஆஜராகி விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மத அமைப்பான விஹெச்பி அமைப்பு சார்பில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அலகாபாத் உயநீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், 'பெரும்பான்மையாக உள்ள மக்களின் விருப்பத்துக்கேற்பவே இந்தியா செயல்பட வேண்டும். இதுதான் சட்டம்' எனக் கருத்துகளை தெரிவித்தார். மேலும் பொது சிவில் சட்ட அமலாக்கத்துக்கு ஆதரவாகவும் அவர் அந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்தார்.
நீதிபதியின் சர்ச்சைக்குரிய காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவரின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதேபோல சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும், வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் பேசியுள்ள நீதிபதி சேகர் குமார் யாதவை பதவி நீக்கக் கோரி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடந்த 13-ஆம் தேதி அளித்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான கொலீஜியம் முன் நீதிபதி சேகர் குமார் யாதவ் நேற்று ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன விளக்கம் அளித்தார், அதற்கு கொலிஜியத்தின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.