தொடர் விடுமுறை: சுண்ணாம்பாறு படகு குழாமில் குவிந்த 1 லட்சம் சுற்றுலா பயணிகள்!
புதுச்சேரியில் 3 நாட்கள் தொடர் விடுமுறையின் காரணமாக சுண்ணாம்பாறு படகு குழாமில் சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகளின் வருகையால் ரூ.25 லட்சம்
வசூலானது.
புதுச்சேரியில் நோணாங்குப்பம் பகுதியில் 6 கடலுடன் கலக்கும் இடத்தில் இயற்கையான மணல் திட்டு உள்ளது. இந்த பகுதியில் சுண்ணாம்பாறு படகு குழாம் கடந்த 1990-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. புதுச்சேரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த படகு குழாம் அமைந்துள்ளது. புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் இந்த படகு குழாம் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
தொடர்ந்து ‘பாரடைஸ் பீச்’ என அழைக்கப்படும் இந்த படகு துறையில் ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட் என பல வகையான படகுகள் உள்ளன. மேலும் அங்கு குதிரை சவாரி, இசையுடன் ஆனந்தகுளியல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இதனால் இந்த படகு பயணம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.
இதையும் படியுங்கள்: அமீர் இயக்கும் “இறைவன் மிகப் பெரியவன்” – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மேலும், சாதாரண நாட்களில் சுமார் 500-லிருந்து 1000 பேர் வருகை தரும் நிலையில், வார விடுமுறை நாட்களில் 3,000 பேர் வரை வருகின்றனர். இந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை இருந்ததால், சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதன் காரணமாக ரூ. 25 லட்சம் வரை கட்டணம் வசூல் ஆகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆங்கில புத்தாண்டை முன்னிட்டும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் தொடர்ந்து சுற்றுலா பயனிகள் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து வருகின்றனர்.