தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூழந்த வெள்ள நீர்! உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை!
தொடர் கனமழை பெய்ததில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளதால் உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்: தாமிரபரணி நீரேற்று நிலையங்களில் வெள்ள நீர்: 4 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?
இதனிடையே தூத்துக்குடியில் மத்திய குழு இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது. தொடர்ந்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் ஆய்வு செய்ய உள்ளார். இந்த நிலையில் தூத்துகுடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழந்துள்ளது. வெள்ள நீர் இன்னும் வடியாததால் போதிய இடவசதியில்லாமல், உடற்கூராய்வு செய்யும் உடல்களை பிணவறையில் வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றுக்கு மேற்பட்ட இறந்தவர்களின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர். இந்த மழை வெள்ள நேரத்தில் இப்படி ஒரு நிலை இருக்க கூடாது என உறவினர்கள் வேதனையாக தெரிவித்துள்ளனர்.