தொடர் மின்தடை - கோத்தகிரி அரசு மருத்துவமனையில் செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை வழங்கிய அவலநிலை!
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பால், செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அமைந்துள்ள இடுகரை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் துரை, ஆனந்தி தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தைக்கு, நேற்று மாலை திடீரென உடல்நல
குறைவு ஏற்பட்டு, வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலம், கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தொடர்ந்து மருத்துவர் மற்றும் செவிலியர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வந்த மழை காரணமாக, மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டர் இயக்கப்படாமல், செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்ட மருத்துவர்கள், மேல் சிகிச்சை வழங்க உதகை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிற
நோயாளிகளிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும்
முன் மருத்துவமனையில் மின் விநியோகத்தை முறையாக வழங்கவும், மின்சார கோளாறுகளை
சரி செய்யக்கூடிய ஊழியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.