வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; தொடர போகும் கனமழை! -வானிலை ஆய்வு மையம் தகவல்!!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, இன்று காலை 5:30 மணி அளவில் மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய மற்றும் தெற்கு வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு:
இது அடுத்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆந்திரப் பிரதேச கடற்கரையில் மேற்கு மத்திய வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
அதை தொடர்ந்து, இது வடகிழக்கு திசையில் திரும்பி, நவம்பர் 17 ஆம் தேதி ஒடிசா கடற்கரையில் வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆகிய இடங்களில் வரும் நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.