ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப் பெருக்கு : 1.55 லட்சம் கனஅடி நீர்வரத்து!
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,55,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்தது. இது மேலும் அதிகரித்து நேற்று மாலை நிலவரப்படி, வினாடிக்கு 1,32,000 கன அடியாக நீர்வரத்து உள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை நிலவரப்படி 1.55 லட்சம் கன அடியாக உயர உயர்ந்துள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று 13-வது நாளாக பரிசல் இயக்கவும் அருவிகள் மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க தடை நீடித்து வருகிறது. மேலும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், காவிரி கரையோரப் பகுதிகளில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள் : ரயிலில் வந்திறங்கிய பார்சல்… மட்டனுக்கு பதில் நாய் இறைச்சி விற்பனை? பெங்களூரில் அதிர்ச்சி!
மேலும் தருமபுரி மாவட்டத்தில் காவிரி கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாகமரை, பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.