தொகுதி மறுவரையறை கூட்டுக்குழு - பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்பு!
மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரை சீரமைப்பு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்ததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்தாம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். அதில் தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில
முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
முதலமைச்சர் சார்பில் தமிழ்நாடு அமைச்சர்கள், எம்பிக்கள் நேரடியாக பல்வேறு
மாநிலங்களுக்கு சென்று அழைப்பு விடுத்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பை பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்
ஏற்றுக்கொண்டு கூட்டத்தில் கலந்து கொள்வதாக உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள
தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடைபெற உள்ள இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள ஜனசேனா பங்கேற்க உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து ஜனசேனா கட்சியின் மக்களவை உறுப்பினர் உதய் சீனிவாஸ் கலந்து கொள்ள உள்ளார்.