“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” - ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேட்டி!
டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினார்.
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மக்கள் தொகை மேலாண்மை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது , “தொகுதி மறுசீரமைப்பு 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஒரு தொடர்ச்சியான செயல்முறை. எல்லா பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் இணைக்க கூடாது. தொகுதி மறுசீரமைப்பு, மக்கள் தொகை மேலாண்மை இரண்டும் வேறுபட்டவை. நான் தேசிய நலனைப் பற்றி பேசுகிறேன். மக்கள் தொகை வளர்ச்சியை அந்தந்த அரசுகள் ஊக்குவிக்க வேண்டும்.
ஆந்திரப் பிரதேசத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 15,000 வழங்குவதன் மூலம் மக்கள் தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கிறோம். மக்கள்தொகை வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டை நானும் ஆதரித்தேன். ஆனல், இப்போது எனது கருத்துக்களை மாற்றி, மக்கள் தொகை வளர்ச்சியை ஊக்குவிக்கிறேன்” என்றார்.
தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவிடம் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர், “அது விவாதிக்கப்படும். சில நேரங்களில் சில முடிவுகள் அனுமானங்களின் அடிப்படையில் எடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் அனைத்து அனுமானங்களும் சமூகத்திற்கு பலனைத் தருவதில்லை”
இவ்வாறு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளார்.