For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

21 மாவட்டங்கள் கொண்ட தொகுதி பட்டியல் - காங்கிரஸ் மறுப்பு!

03:44 PM Jan 28, 2024 IST | Web Editor
21 மாவட்டங்கள் கொண்ட தொகுதி பட்டியல்   காங்கிரஸ் மறுப்பு
Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை என மறுத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகலில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல்வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழ்நாடு பொறுப்பாளர் அஜய்குமார் ஆகியோர் இன்று சென்னை விமான நிலையம் வந்தனர்.

அவர்கள் நேராக சத்திய மூர்த்தி பவனுக்கு சென்றனர். அங்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் 21 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி அதில் 14 தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட தொகுதிகளை கேட்க உள்ளதாகவும், இந்த 9 தொகுதிகளை திமுக தர மறுத்தால் மேலும் 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது.

நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சை, மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், அரக்கோணம், தென்சென்னை ஆகிய தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த தேர்தலில் வென்ற 9 தொகுதிகளுடன் கூடுதலாக 5 தொகுதிகளை சேர்த்து மொத்தமாக 14 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க திமுகவிடம் காங்கிரஸ் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறுப்பு செய்தி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், “2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement