அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் #RAW அதிகாரி! யார் இந்த விகாஷ் யாதவ்?
நியூயார்க்கில் காலிஸ்தான் பிரமுகர் குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவரை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்துள்ளது.
அமெரிக்க - கனடா இரட்டை குடியுரிமை பெற்ற சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுனுக்கு எதிரான படுகொலை முயற்சியில், இந்திய முன்னாள் ரா அதிகாரி விகாஷ் யாதவ் ஈடுபட்டதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், விகாஷ் யாதவ் பெயரையும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் FBI-ல் தேடப்படுபவர் எனவும் போஸ்டர் வெளியிட்டுள்ளது. அவருக்கு எதிராக கடந்த 10ஆம் தேதி கைது வாரண்டும் பிறப்பித்துள்ளது.
தொடர்ந்து இதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இவை அனைத்தும் முற்றிலும் ஆதாரமற்ற, தேவையற்ற குற்றச்சாட்டுகள் என இந்தியா தெரிவித்து வருகிறது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க இந்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபர் விகாஷ் யாதவ் ஆவார். இதற்கு முன்னரே நிகில் குப்தா என்பவர் குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது நிகில் குப்தாவின் இணை சதிகாரர் என அமெரிக்கா குற்றம் சாட்டும் யாதவ் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
39 வயதான விகாஷ் யாதவ், இந்தியாவின் #RAW அமைப்பின் முன்னாள் ஊழியர் ஆவர். இதற்கு முன் அவர் சிஆர்பிஎப்பில் பணியாற்றி வந்தார்.