வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகும் காங்கிரஸ் தொண்டர்கள்!
4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இனிப்புகள் குவிக்கப்பட்டு, ஆடல், பாடல் என கொண்டாட்டங்கள் கலைகட்டியுள்ளன.
இந்தியாவின் மிசோரம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அதிக எண்ணிக்கையிலான இனிப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. காலை முதலே கட்சி தொண்டர்கள் அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆடலும், பாடலும் என கொண்டாட்டங்கள் காலை முதலே தொடங்கியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் பெரும் நம்பிக்கையில் உள்ளதாக அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்திருந்தனர். தேர்தலில் ஒவ்வொரு சுற்று முடிவின்போதும் முன்னிலை பெறுவதைக் கொண்டாடும் விதமாக காங்கிரஸ் தொண்டர்கள் லட்டுகளைக் குவித்துள்ளனர்.