“நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கக்கூடாது” என காங். தலைவர் கன்னையா குமார் கூறினாரா?
This News Fact Checked by ‘Logically Facts’
“நக்சலைட் தாக்குதலில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு தியாகிகள் அந்தஸ்து வழங்கக்கூடாது என்றும், ராணுவத்தால் கொல்லப்பட்ட நக்சலைட்டுகளை தியாகிகள் என்று அழைக்க வேண்டும்” என காங். தலைவர் கன்னையா குமார் கூறியதாக பகிரப்படும் வீடியோ தவறாக வழிநடத்துவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் தலைவராக இருந்தவர் கன்னையா குமார். புரட்சிகரமாகப் பேசி, தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டதால் இவர் பிரபலம் அடைந்தார். தனது கல்விக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், 2019 மக்களவைத் தேர்தலில், பீகாரின் பேகுசராய் தொகுதியில் போட்டியிட்டார்.
அவரது சொந்த கிராமம் அமைந்துள்ள இத்தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் போட்டியிட்டார். அந்த தேர்தலில் கன்னையா, 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவிடம் தோல்வி அடைந்தார். பின்னர், காங்கிரஸில் இணைந்த கன்னையா குமார், தற்போதைய மக்களவைத் தேர்தலில் வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த வீடியோவை பகிர்ந்து, “காங்கிரஸ் தலைவர் கன்ஹையா குமார் முதல் ரவீஷ் குமார் வரை, தேச விரோதிகளுக்கு பாடம் புகட்ட வேண்டுமானால் சிந்தித்து வாக்களியுங்கள்" என்று தலைப்பிடப்பட்டு பகிரப்படுகிறது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த வீடியோவில் உள்ள முக்கிய வார்த்தைகளை கூகுளில் தேடியபோது, மார்ச் 16, 2016 அன்று NDTV இணையதளத்தில் ரவீஷ் குமாருடன் கன்னையா குமாரின் முழு நேர்காணலை காணமுடிந்தது.
அந்த வீடியோவில், NDTV செய்தியாளர் ரவீஷ் குமார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரிடம், “எல்லையில் வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். இதை குறைந்தபட்ச ஒற்றுமை என்று முட்டாள்தனமாக பேசுகிறீர்கள். உங்கள் சகோதரனும் CRPFல் இருந்தார். அவரும் நக்சலைட்டுகளுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தார் என்று சொன்னீர்கள்” என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு பதிலளித்த கன்னையா குமார், “யாருடைய தியாகத்தையும் நாங்கள் இழிவுபடுத்த விரும்பவில்லை. அனைத்து தியாகிகளுக்கும் தியாகி அந்தஸ்து கொடுக்க வேண்டும். அவர்களை தியாகிகளாக ஆக்குபவர்களுக்கு எதிராக போர் தொடுத்து கொல்லுங்கள் என்று நான் கூறுகிறேன். நக்சல்கள் என்று சொல்லி கொல்லப்படுபவர்கள் இந்நாட்டு ஏழையின் மகன்கள் தான்.
பிப்ரவரி 9, 2016 அன்று, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தேசத்துரோக முழக்கங்களை எழுப்பியதாக கன்னையா குமார் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜாமீனில் வெளிவந்த பிறகு இந்த நேர்காணல் நடைபெற்றது.
முடிவு:
நக்சலைட் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து வழங்கக் கூடாது என ரவீஷ் குமாருக்கு அளித்த பேட்டியில் கன்னையா குமார் கூறியதாக சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பது தவறானது. உண்மையில், நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி கொல்லப்பட்டவர்களையும், ராணுவ வீரர்களையும் தியாகிகள் என்று அழைக்க வேண்டும் என்று கன்னையா குமார் கூறியிருந்தார். எனவே, வைரலான வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Logically Facts’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.