மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்திக்கு ரூ.1.40 கோடி செலவு! #electioncommission -ல் காங்கிரஸ் தகவல்
மக்களவைத் தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் செலவுக்காக தொகுதிக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் வழங்கியுள்ளது.
18-ஆவது மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. ஜூன் 4-ஆம் தேதி வெளியான தோ்தல் முடிவுகளில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை அக்கட்சி தோ்வு செய்தது. இத்தேர்தலில் கேரளத்தின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
விதிகளின்படி ஒரு தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டியதால், ரேபரேலி தொகுதியை ராகுல் தக்கவைத்தார். அவர் ராஜிநாமா செய்த வயநாடு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தோ்தல் செலவுகளுக்காக ராகுல் காந்திக்கு வயநாடு, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளுக்கு தலா ரூ.70 லட்சத்தை காங்கிரஸ் தலைமை கட்சி நிதியிலிருந்து வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : அமெரிக்க #InvestorsConference | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மேலும், கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த ஸ்மிருதி ரானியைத் தோற்கடித்த கிஷோரி லால் சர்மா, கேரளத்தின் ஆழப்புழையில் போட்டியிட்ட கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், தமிழ்நாட்டின் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆகியோரும் தலா ரூ.70 லட்சம் பெற்றுள்ளனர். ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரணாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்குக்கு மட்டுமே அதிகபட்சமாக ரூ.87 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஆனந்த் சா்மா, திக்விஜய் சிங் ஆகிய இருவரும் முறையே ரூ.46 லட்சம் மற்றும் ரூ.50 லட்சம் பெற்றுள்ளனர்.