குஷ்பு வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான நடிகை குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை சேர்ந்தவருமான நடிகை குஷ்பு சேரி என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் சாந்தோம் பிரதான சாலையில் இருக்கும் குஷ்பு வீட்டின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் குஷ்புவின் உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும், துடைப்பத்தால் அடித்தும், முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து பட்டினம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
முன்னதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பட்டியலின மக்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் குஷ்பு பேசியுள்ளார். குஷ்புவின் வார்த்தைகளை பாஜக தலித் தலைவர்களான மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், வி.பி. துரைசாமியின் ஆதரிக்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் இதுவரை அவர் வெளியிட்ட ட்வீட் நீக்கப்படாமல் உள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் அவரது ட்வீட்டை நீக்க வேண்டும். இல்லையெனில் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும். நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் எஸ்சி எஸ்டி அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். குஷ்புவின் செயலுக்கு எதிராக நடிகர் சங்கத்திடம் மனு அளிப்போம் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகை குஷ்பு இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.