“ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளனர்!” - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ராமர் கோயில் கட்டப்பட்டதால் காங்கிரஸ் கட்சியும் INDIA கூட்டணியினரும் கோபம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் 19-ஆம் தேதி (19.04.2024) தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி ஜூன் 1-ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
ராமர் கோயில் விவகாரத்தில் 500 ஆண்டுகளுக்கு பிறகு கனவு நடனாகியுள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. இந்த முடிவு தவறானது என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் இந்தியாவின் அடையாளமாக ஊழல் மாறிவிட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டைக் கொள்ளையடிக்கும் உரிமம் இருப்பதாக காங்கிரஸ் நினைத்தது, ஆனால் 2014 இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, காங்கிரஸின் கொள்ளை உரிமத்தை ரத்து செய்தோம். நீங்கள் மோடிக்கு உரிமம் கொடுத்ததால் உரிமத்தை மோடி ரத்து செய்ய முடிந்தது. இப்போது அவர்களின் கடை மூடப்பட்டுவிட்டது, இதனால் அவர்கள் மோடியை திட்டுவார்களா இல்லையா? அப்படியானால் என்னை யார் பாதுகாப்பார்கள்? இந்த கோடிக்கணக்கான என் நாட்டு மக்கள், என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், இன்று எனது பாதுகாப்பாக மாறியுள்ளனர்.
பழங்குடி சமூகம் எப்போதுமே காங்கிரஸால் அவமதிக்கப்பட்டது, அதே பழங்குடி சமூகத்தின் மகள் இன்று நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்கிறார். சத்தீஸ்கருக்கு முதல் பழங்குடியின முதல்வரை பாஜக அளித்துள்ளது. பழங்குடியினருக்கென தனி அமைச்சகம் மற்றும் தனி பட்ஜெட்டை பாஜக உருவாக்கியுள்ளது, பழங்குடியினர் நலனுக்கான பட்ஜெட் கடந்த 10 ஆண்டுகளில் 5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.