அமேதி தொகுயில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி!
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் ‘இந்திய நீதி பயணம்’ உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதிக்குள் நுழைந்தது.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைபயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து அசாம், மேகாலயா, மேற்குவங்கம், ஜார்கண்ட், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
உத்திரப்பிரதேசம், அமேதி பகுதியில் ராகுல்காந்தி 2004 முதல் 10 ஆண்டுகள் எம்பியாக பதவி வகித்தார். இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் இன்று நடைப்பயணம் மேற்கொண்டார்.
அமேதியில் ராகுல்காந்திக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமேதி தொகுதியில் போட்டியிட்டு ராஜீவ் காந்தி 4 முறையும், சோனியா காந்தி ஒரு முறையும் மக்களவைக்கு தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.