ராஜஸ்தானில் பெண்களுக்கு எதிரான அரங்கேறிய வன்முறைகளுக்கு காங்கிரஸே பொறுப்பு - பிரதமர் மோடி!
ராஜஸ்தானில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு காங்கிரஸ் அரசே பொறுப்பு என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. 73 தொகுதிகளில் மட்டும் வென்ற பாஜக எதிர்க்கட்சியானது. இதனைத் தொடர்ந்து 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 199 தொகுதிகளுக்கு வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன. இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. அதையொட்டி தேர்தலுக்கான கடைசிநாள் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:
எதிரணியில் உள்ள தலைவர்கள் மோடியை தாக்கிப் பேசினால் அவர்களது வேலை முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர். அவர்களுக்கு பாஜகவின் வலிமை புரிவதில்லை. ராஜஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக இத்தனை பெண்களும் கூடியுள்ளனர். பெண்களுக்கு பாதுகாப்பளிக்காத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பளிக்க மாட்டார்கள்.” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.