For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் நோக்கம்!" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு!

10:01 PM Jun 29, 2024 IST | Web Editor
 நீட் தேர்வு விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸின் நோக்கம்      மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
Advertisement

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக குழப்பத்தை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் நோக்கமாக இருக்கிறது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது :

"நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார். உண்மையில் காங்கிரஸ் விவாதத்தை விரும்பவில்லை. விவாதத்தில் இருந்து தப்பிக்கவே விரும்புகிறது. சீராக போய்க்கொண்டிருக்கும் நிறுவன கட்டமைப்பின்மீது அதிருப்தியை, குழப்பத்தை, தடையை உருவாக்குவது மட்டுமே அக்கட்சியின் நோக்கம்.

குடியரசுத் தலைவரும்கூட இந்த விவகாரம் குறித்து பேசி இருக்கிறார். நீட் தேர்வில் சவால்கள் மற்றும் குறைகள் இருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். அரசு சார்பில், எந்த விதமான விவாதத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நான் தெளிவாகக் கூறி இருக்கிறேன்.

இதையும் படியுங்கள் : “குடிநீரில் கழிவுநீர் கலப்படம் இல்லை” - சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

இதுபோன்ற பிரச்னைகள் (வினாத்தாள் கசிவு) 2014 க்கு முன்பே வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதற்காக, அதனை நான் நியாயப்படுத்த முடியாது. தேசிய தேர்வு முகமைக்கு புதிய தலைமை கிடைத்துள்ளது. முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் தேசிய தேர்வு முகமையில் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பிரச்னைக்குத் தீர்வு காண புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

மேலும், இந்த விவகாரம் குறித்த வழக்கு முழுவதும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட அல்லது ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கான புதிய தேதிகள் நேற்று (ஜூன் 28) அறிவிக்கப்பட்டன. நீட் முதுகலை தேர்வுக்கான புதிய தேதிகள் வரும் ஜூலை 1 அல்லது 2ம் தேதிகளில் அறிவிக்கப்படும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
Advertisement