"தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி" - சத்தீஸ்கரில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
"தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது" என சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
90 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
‘சத்தீஸ்கரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்பட்சத்தில் சுமார் 6,000 அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் சுவாமி ஆத்மானந்தா ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கப்படும், சக்ஷம் யோஜனா(Saksham Yojna) திட்டத்தின் கீழ் பெண்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் ரூ. 500 மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருந்தது.
90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அதேபோன்று, மிசோரம் மாநில சட்டபேரவையும் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று தொடங்கியது. சத்தீஸ்கரில் முதற்கட்டமாக 20 தொகுதிகளுக்கு வாக்குப்பதி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவில் 5,304 வாக்குச் சாவடிகளில் 40 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கரில் நவம்பர் 17ல் நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூரில் உள்ள பிஷ்ராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது..
"காங்கிரஸ் எப்போது ஆட்சிக்கு வந்தாலும், நாட்டில் தீவிரவாதம் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது. கடந்த சில மாதங்களாகவே பாஜக நிர்வாகிகள் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு நாட்களுக்கு முன்னர் கூட பாஜக நிர்வாகி நக்சலைட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினர்களுக்கு பணத்தைச் செலவு செய்வதை வீண் என நினைத்தனர். ஆனால் பாஜக பழங்குடியினருக்கான மத்திய பட்ஜெட்டை 5 மடங்கு உயர்த்தியுள்ளது.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.