மணிப்பூர் மாநில தின வாழ்த்து தெரிவித்த பிரதமர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்!
மணிப்பூரின் மாநில தினத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 21-ம் தேதி மணிப்பூர், மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில தினத்தை கொண்டாடுகின்றன. இந்த மாநிலங்கள், 1971-ம் ஆண்டு வடகிழக்குப் பிராந்தியம் என்ற சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டன. மேலும், மணிப்பூர் 1949-ம் ஆண்டில் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. பின்னர் ஒன்றியப் பிரதேச தகுதிநிலை வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “மு.க.ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்!” – சேலம் இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்நிலையில், மணிப்பூரின் மாநில தினமான இன்று பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, பிரதமர் மோடியின் வாழ்த்துகளை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்ததாவது:
'மணிப்பூரின் மாநில தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க நேரமுள்ள பிரதமருக்கு, அங்கு செல்லவோ, அங்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கவோ நேரமில்லை. மக்களின் இன்னல்கள் இன்னும் தொடர்கின்றன. வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துவருகிறது. சமூக நல்லிணக்கம் குலைந்துள்ளது. ஆனால், பிரதமர் மணிப்பூர் பற்றி மௌனம் மட்டுமே சாதிக்கிறார். மாநிலத்தின் அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்.' எனக் கூறியுள்ளார்.