பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்? காங்கிரஸ் முடிவு!
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த பட்ஜெட் விவாத கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த காரசாரமான விவாதம் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வலியுறுத்தி வரும் நிலையில் பாஜக அதற்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அனுராக் தாகூருக்கும், மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று மக்களவையில் அனுராக் தாக்கூர் பேசுகையில், சாதி தெரியாதவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
அனுராக் தாகூர் வெளிப்படையாக ராகுல் காந்தியை சாதிய கன்னூட்டத்தில் இழிவுபடுத்தி பேசியது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேவேளையில் ராகுல் காந்தி "நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம். ஆனால் நாங்கள் நாடாளுமன்றத்தில் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை நிறைவேற்றுவோம் என்றார்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் நேற்று அனுராக் தாக்கூர் பேசியதை அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று கூறியுள்ளதும் காங்கிரசார் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக எம்.பி. அனுராத் தாக்கூர் ராகுல் மீது விமர்சனம் வைத்த நிலையில் அதனை பிரதமர் மோடி தனது X தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் புகார் அளிக்க காங்கிரஸ் திட்டமிட்டு இருக்கிறது.