எஸ்.ஐ.ஆர்-க்கு எதிராக மாபெரும் பேரணி - காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் மறைவு, இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக சுமார் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையமானது பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் என்று அறிவித்தது. அதன்படி தமிழ் நாட்டில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பபணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தலைமையில் எஸ்ஐஆர் தொடர்பாக அலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் எஸ்ஐஆர் நடைபெறும் மாநிலங்களின் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்பி கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கேரள சட்டமன்றத்தில் SIR-யை ஒத்திவைக்க கோரி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது . கேரள தலைமைத் தேர்தல் அதிகாரி கூட, மாநிலத்தில் SIR-யை நடத்த இது சரியான நேரம் அல்ல என்று மத்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தார். பாஜகவை தவிர்த்த மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தியன. ஆனால் தேர்தல் ஆணையம் இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இதன் மூலம் தேர்தல் ஆணையமானது பாஜக மற்றும் நரேந்திர மோடியின் சார்பாக செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
இன்று, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி குறித்து மாநில கமிட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இவற்றை எதிர்த்து நாங்கள் போராடப் போகிறோம். ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சிகளையும் அழிப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். டிசம்பர் முதல் வாரத்தில், ராம்லீலா மைதானத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் மிகப்பெரிய பேரணி ஒன்றை நடத்த உள்ளது” என்றார்.