For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

தமிழ்நாடு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
04:49 PM Apr 04, 2025 IST | Web Editor
பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்   செல்வப்பெருந்தகை அறிவிப்பு
Advertisement

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

Advertisement

"மத்திய பாஜக அரசு பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்வா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், தொடர்ந்து மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துமே தென் மாநிலங்களில் குறிப்பாக, தமிழ்நாட்டின் நலன்களுக்கு விரோதமாக திட்டமிட்டு செய்லபடுத்தப்பட்டு வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்விமுறை என்ற இலக்குடன் ஒற்றை ஆட்சி நடத்தி அதிகாரக் குவியலுடன், சர்வாதிகார பாசிச ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். அரசமைப்புச் சட்டம் உருவாக்கிய அனைத்து அமைப்புகளையும் தனது கைப்பாவையாக மாற்றி செயல்படுகிறார். இவரது செயல்பாடுகளை தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தாலும் இயலவில்லை.

கடந்த காலங்களில் காவிரி டெல்டாவில் பூமியை குடைந்து ஹைட்ரோ கார்பன் திட்டம், மதுரையில் பூமியை பிளந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டம், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் தாமிர உற்பத்திக்கு ஆதரவு, தேனியில் மலைகளை துளையிட்டு நியூட்ரினோ ஆய்வகம், பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா பகுதியில் ஆழ்கடல் எண்ணெய்க் கிணறுகள் அமைப்பது, கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பை பாழாக்குகிற வகையில் நீட் நுழைவு தேர்வு திணிப்பு, புதிய கல்விக் கொள்கை பெயரில் மும்மொழித் திட்டத்தின் மூலம் இந்தி திணிப்பு, தொகுதி சீரமைப்பு என்று கூறி தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைப்பு என தொடர்ந்து தமிழக விரோத திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போராட்டங்களை மோடி அரசு உதாசீனப்படுத்தி வருகிறது.

மும்மொழித் திட்டத்தை ஏற்கவில்லை என்பதால் ‘சமக்ரா சிக்ஷா அபியான்” திட்டத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய ரூபாய் 2ஆயிரத்து 162 கோடியை தர மறுப்பு, பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட சுமார் 5000 கோடி ரூபாய் இழப்பு, அந்த நிதியை வேறு மாநிலங்களுக்கு மடை மாற்றம் செய்தல், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு தர வேண்டிய 50 சதவிகித நிதியை வழங்க மறுப்பு, வெள்ளம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு கட்டங்களாக மொத்தம் ரூபாய் 37,000 கோடியை தமிழக அரசு கேட்டதற்கு, மத்திய அரசு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 276 கோடி மட்டுமே வழங்குவது என தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

மாநில வரிப் பகிர்வு ஆண்டுக்கு ஆண்டு குறைக்கப்பட்டு செஸ், சர்சார்ஜ் மூலம் மத்திய அரசின் வருமானத்தை பெருக்கிக் கொள்கிறது. தமிழக அரசு ஒரு ரூபாய் வரியாக வழங்கினால் மத்திய அரசு 26 பைசா தான் திரும்ப தருகிறது. ஆனால், உத்தரபிரதேச மாநிலம் ஒரு ரூபாய் வரியாக வழங்கினால் ரூபாய் 2.39 திரும்ப கொடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசமைப்புச் சட்டம் சிறுபான்மை இனத்தவருக்கு வழங்கப்பட்ட உரிமைகளையும், மதரீதியாக சொத்துக்களை பராமரிப்பதையும் சீர்குலைக்கிற வகையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு தனது மிருகபல மெஜாரிட்டியால் நிறைவேற்றியிருக்கிறது. இது சிறுபான்மையின மக்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட கொடூரமான அடக்குமுறையாகும்.

புதிய கல்விக் கொள்கையை திணித்து, மூன்று செயல் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசில் அதிகாரத்தை மையப்படுத்துதல், கல்வியை வணிகமயமாக்கல், தனியார் முதலீட்டிற்கு ஊக்கம், பாடத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களை காவிமயமாக்குதல், மத்திய - மாநில கல்வி அமைச்சர்களை கொண்ட மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தை, 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு அமைக்காமல் மத்திய அரசு புறக்கணிப்பது, புதிய கல்விக் கொள்கை குறித்து மாநில அரசுடன் கலந்து பேசாமல் கூட்டாட்சி கோட்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பது, மாநில அரசின் நிதியில் செயல்படுகிற பல்கலைக் கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமிப்பதற்கு கூட, தமிழக அரசின் அதிகாரத்தை பறித்து அதை ஆளுநரிடம் வழங்க புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துதல் என தொடர்ந்து கல்வி பொதுப் பட்டியலில் இருந்தாலும் அதன் அதிகாரங்களை மத்திய அரசு அபகரித்து செயல்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 46 சுங்கச் சாவடிகளில் ஏற்கனவே உயர்த்தப்பட்ட கட்டணத்திற்கு கூடுதலாக 5 முதல் 10 சதவிகிதம் வரை உயர்த்தி வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தர மறுப்பு, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாராக் கடனாக ரூபாய் 16 லட்சம் கோடி தள்ளுபடி, 100 நாள் வேலை திட்டத்திற்கு தர வேண்டிய ரூபாய் 4034 கோடியை தர மறுத்து மத்திய அரசு அத்திட்டத்தை முடக்குவது, கடந்த 5 மாதங்களாக தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை என பல்வேறு நிலைகளில் தமிழக நலன்களுக்கு விரோதமாக பாஜக அரசு செயல்படும் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எனவே, பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக ஏப்ரல் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், எனது தலைமையில் காலை 9.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடிக்கு எதிராக எழுப்பப்படுகின்ற கண்டனக் குரல், தலைநகர் டெல்லியில் எதிரொலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement