For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த தமிழ்நாடு எம்.பி-களின் போர்க்குரலுக்கு வாழ்த்துகள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
02:43 PM Mar 11, 2025 IST | Web Editor
“தர்மேந்திர பிரதான் பேசியதை அரைமணி நேரத்தில் திரும்பபெற வைத்த எம் பி களின் போர்க்குரலுக்கு  வாழ்த்துகள்”   முதலமைச்சர் மு க ஸ்டாலின்
Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில்  புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 280 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் 47 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 497 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

Advertisement

அப்போது அவர் அவர் பேசியதாவது, “செங்கல்பட்டில்  மகேந்திரா, விப்ரோ, பி.எம்.டபஸ்யூ. டி.வி.எஸ். உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் முதல் முகவையாக தமிழ்நாடு இருப்பதில் த.மோ. அன்பரசன்  பங்கும் இருக்கிறது. அவர் உழைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம் அமைக்கபட்டதோடு அங்கு 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பூங்காக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. செங்கல்பட்டில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி  நடைபெற்று வருகிறது. மாமல்லபுரத்தில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வரதராஜபுரம், முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் 42 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 4 ஆயிரத்து 276 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. மறைமலைநகரில் புதிய தாவரவியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இப்படி ஏராளமான திட்டங்கள் வரவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக புதிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். தொழில்துறையில் முன்னனியில் இருப்பது செங்கல்பட்டு மாவட்டம். அதை ஊக்குவிக்கும் வகையில் செய்யூரில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும். எதை அறிவித்தாலும் அது வேகமாக அரசாணையாகி செயல்பாட்டுக்கு வரும். அதுமட்டுமில்லாமல் திட்டங்களை முடித்து திறப்பு விழாவுக்கு நானே வருவேன். இப்படி துரிதமாக செயல்படுவதால்தான் இந்தியாவின் 2 வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. பொருளாதாரா குறியீட்டில் தமிழ்நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பத்து லட்சம்  தனியார் முதலீட்டு திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நம் ஆட்சியின் மீதான நம்பிக்கை.

வறுமை, பட்டினி மரணம் இல்லை என்ற நிலையில் திறமையான நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். சில தடைகள் இல்லையென்றால், தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ந்திருக்கும். இந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய 2000 கோடியை தர முடியும் என்று திமிராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகிறார். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மொத்தமாக அழித்தொழிக்க நினைக்கிறார்கள். நாம் அதை எதிர்க்கிறோம்.

கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சிக்காமல், கல்வியில் இருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை திட்டங்களும் தேசிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார் மையமாக்குகிறது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாத்தோடு புகுத்துவது, சின்ன பிள்ளைகளுக்கு பொதுத்தேர்வு, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு நீட் போன்ற நுழைவுத் தேர்வு இப்படி நிறைய இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துதான் தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக சொல்கிறோம். ஆனால் இதையேல்லாம் ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என மத்திய அமைச்சர் பிளாக் மெயில் பண்ணுகிறார். 10,000 கோடி தந்தாலும் அவர்களின் நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக சொன்னேன்.  இவர்களின் சதிகளுக்கு எதிராக விடாமல் போராடுவதை தாங்கிக்கொள்ள முடியாத தர்மேந்திர பிரதான் நேற்று நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் நாகரீகமில்லாதவர்கள் என்று நாவடக்கம்  இல்லாமல் பேசியிருக்கிறார். அவர் பேசிய அரைமணி நேரத்தில் அதை திரும்பபெற வைத்துள்ளனர் நம் தமிழ்நாட்டு எம்.பி-க்கள் அவர்களுடைய போர்க்குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement