திமுகவுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் : மக்களவை 2 , மாநிலங்களவை 1 , தனிச் சின்னம் - மதிமுக கோரிக்கை.!
மதிமுக தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுக உடனான முதல் கட்ட ஆலோசனை இன்று நிறைவடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து இன்று திமுக-வின் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய மதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியுள்ளது
இந்த முதல் கட்ட ஆலோசனையில் மதிமுக தேர்தல் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள கழக அவைத் தலைவர் அர்ஜூனராஜ், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அரசியல் ஆய்வு மைய செயலாளர் ரா.அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் திமுக தேர்தல் குழுவினரை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை முடிந்த நிலையில் மதிமுக தொகுதிப் பங்கீடு குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் தெரிவித்ததாவது..
“ பேச்சுவார்த்தை சுமூகமாக மகிழ்ச்சிகரமாக இருந்தது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல் சீட்டுகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டும் கேட்டுள்ளோம். இந்த தேர்தலில் சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட கோரிக்கை வைத்துள்ளோம். பிறகுதான் எந்த சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தெரியவரும். எங்களுடைய சின்னத்தில் நிற்பது தான் எங்களுடைய விருப்பம் ” என தெரிவித்தனர்.