புதிய போப் தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு - வாடிகனில் நாளை செல்போன் சிக்னல்கள் துண்டிப்பு!
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது. 88) கடந்த ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு உலகத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து போப் பிரான்சிஸ் உடல் அவரது விருப்பப்படி ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் ஏப்ரல் 26-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து நாளை(மே.07) புதிய போப் யார்? என்பதை தேர்வு செய்யக்கூடிய மிகவும் ரகசியமான கான்க்ளேவ் என்ற வாக்கெடுப்பு மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில் 133 கார்டினல்களும் வாக்களித்து அடுத்த போப்பை தேர்வு செய்வார்கள். இதற்காக அனைத்து கார்டினல்களும் ஏற்கெனவே ரோம் நகருக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கான்க்ளேவ் மாநாட்டை முன்னிட்டு நாளை வாடிகனில் மூன்று மணிக்கு மேல் செல்போன் சிக்னல்கள் செயலிழப்பு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக சிஸ்டைன் சேப்பலைச் சுற்றி சிக்னல் ஜாமர்களைப் பயன்படுத்த வாடிகன் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
கான்க்ளேவ் மாநாட்டுக்கு செல்ல உள்ள கார்டினல்களும் மொபைல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வாக்கெடுப்புக்கு முன்பு முழுமையான தனிமையில் இருப்பார்கள் என்றும் ரகசியத்தை கடைப்பிடிக்க சபதம் எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.