மராத்தி பேசாததற்காக நடத்துனர் மீது தாக்குதல் - கர்நாடகாவில் மூவர் கைது!
கர்நாடக மாநில அரசு பேருந்து நடத்துனராக பணிபுரிபவர் மகாதேவ் ஹுக்கேரி.
நேற்று(பிப்.21) இவர் பணியில் இருந்தபோது, பயணிகள் சிலரால் தாக்குதலுக்கு ஆளான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறையினர் மாருதி துருமுரி, ராகுல் நாயுடு மற்றும் பாலு கோஜகேகர் ஆகியோரை கைது செய்தனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் அந்த நடத்துனர் அளித்த பேட்டியில் “கர்நாடகாவில், பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். ஒரு ஆணுடன் அமர்ந்திருந்த பெண் இரண்டு இலவச டிக்கெட்டுகள் கேட்டார். நான் ஒன்றைக் கொடுத்து, இரண்டாவது டிக்கெட் யாருக்கு என்று கேட்டேன். அதற்கு அந்த பெண், அந்த ஆணை நோக்கி கையை நீட்டினார். ஆண்களுக்கு பேருந்து பயணம் இலவசம் அல்ல என்று கன்னடத்தில் சொன்னேன். அதற்கு அவர்கள் என்னை மராத்தியில் பேசச் சொன்னார்கள். எனக்கு மராத்தி தெரியாது என்றேன். பின்பு சுமார் 6 -7 பேர் தாக்கினர்” என்று வாக்குமூலம் கொடுத்தார்.
இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிபி ரோஹன் ஜெகதீஷ் உறுதியளித்த நிலையில், கைது செய்யப்பட்ட மூவரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்பு அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, கன்னட மொழி, நிலம் மற்றும் தண்ணீரைப் பாதுகாப்பது ஒவ்வொரு கன்னடரின் பொறுப்பு என்றும், மாநிலத்தில் உள்ள அனைவரும் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் தாய்மொழி பேசுவது பெருமைக்குரிய விஷயமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
அதே போல் நேற்று பிரதமர் மோடி மராத்தி சம்மேளன மாநாட்டில், இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை என்றும் மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்க முயற்சிக்கும்போது,நம்முடைய மொழியியல் பாரம்பரியம், வலுவான எதிர்ப்பை தெரிவிக்கிறது என்றும் தெரிவித்தார். அதோடு மொழி பிளவுகளை ஏற்படுத்தும் தவறான எண்ணங்களிலிருந்து விலகி, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது தான் நம் சமூக பொறுப்பு என்றும் கூறியிருந்தார்.