For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு கட்டாய ஓய்வு - உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவு!

03:24 PM Dec 01, 2023 IST | Web Editor
டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு கட்டாய ஓய்வு   உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவு
Advertisement

டிஜிபி ராஜேஸ் தாஸுக்கு கட்டாய ஓய்வு  வழங்க வேண்டும் என உள்துறை முதன்மை செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி திருச்சி,  புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து கண்காணிக்கும் பணியில் தமிழ்நாடு காவல் துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார்.  அப்போது, பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் காரில் அழைத்து சென்று,  பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்தது.

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு அரசின் உள்துறை செயலரிடமும்,  சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிதிபாயிடமும் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்தார்.  அதன்பேரில்,  சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்,  உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  மேலும்,  ராஜேஷ் தாஸ்,  அவரது உத்தரவுப்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த ஒரு எஸ்.பி. ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதில், டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் தீப்பளித்து,  அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 20,500 அபராதமும் விதித்தது.

இந்த நிலையில்,  இந்த வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலர் பெ.அமுதா உத்தரவை பிறப்பித்துள்ளார்.  அதில்,  ராஜேஷ் தாஸை குடிமைப் பணி அதிகாரிகளின் ஒழுங்கு விதிமுறைகளின்படி,  கட்டாய ஓய்வில் அனுப்பும்படி குறிப்பிட்டுள்ளார்.  அதில் ஏதாவது உடன்பாடு இல்லை என்றால் ராஜேஷ் தாஸ் அரசிடம் முறையிடலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ்,  இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் ஓய்வு பெற இருந்த நிலையில்,  அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement