நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் - இருவர் மீது வழக்குப்பதிவு..!
நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள பெரிய மாநகராட்சிகளில் ஒன்று நெல்லை மாநகராட்சி. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை ஈரோட்டைச் சேர்ந்த அன்னை இன்ஃப்ரா என்ற தனியார் நிறுவனம் ஒன்று செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அசோக் குமாரும், அவருடன் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் நேற்று நெல்லை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவை சந்திக்கச் சென்றுள்ளனர்.
அப்போது அசோக்குமார் மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி ஆணையர், நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில், மாநகராட்சி அலுவலகத்திற்கு காவல் ஆணையாளர் மூர்த்தி உத்தரவின்படி வருகை தந்த நெல்லை சந்திப்பு போலீசார், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நின்று கொண்டிருந்த அன்னை இன்ஃப்ரா நிறுவன ஊழியர்கள் மூன்று பேரை பிடித்து காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் அசோக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : கிட்டிப்புள் விளையாடி மகிழ்ந்த மத்திய அமைச்சர் - வீடியோ இணையத்தில் வைரல்..!
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அன்னை இன்ஃப்ரா நிறுவன மேலாண் இயக்குநர் அசோக் குமார் மற்றும் மேலாளர் சக்திவேல் மீது நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 7A, 12 பிரிவென்ஷன் ஆப் கரப்ஷன் அமௌண்ட்மெண்ட் ஆக்ட் 2018 ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.