“நாக்பூர் வன்முறையில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடு கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும்” - முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
நாக்பூர் வன்முறையின் போது சேதமடைந்த பொருட்கள், வாகனங்கள் மற்றும் பொது இடங்களுக்கான பணம் கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்றும், பணம் செலுத்தத் தவறினால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“நாக்பூர் வன்முறையின் போது சேதமடைந்த பொது சொத்துக்களுக்கான இழப்பீடு கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அவர்கள் பணம் செலுத்தத் தவறினால் இழப்புகளை ஈடுகட்ட அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்கப்படும். காவல்துறையினரைத் தாக்கிய கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறையைத் தாக்கியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் வரை எனது அரசு ஓயாது. வன்முறைக்கு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 104 கலவரக்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 12 சிறார்கள் உட்பட 92 பேர் மீது சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
நடிகர் விக்கி கௌசலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாவா’ திரைப்படத்தில் மராட்டிய மகாராஜா சத்ரபதி சம்பாஜியின் வாழ்க்கை வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள முகலாய பேரரசர் ஔரங்கசீபின் கல்லறைக் குறித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று கடந்த ஒருவாரமாக இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லறையை இடிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். இதனால் நாக்பூர் முழுவதும் இரு தரப்பினரிடையே கலவரம் மூண்டது. பாதுகாப்புக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வன்முறையாளர்கள் பல கடைகளையும், வீடுகளையும் சேதப்படுத்தி, தீ வைத்தனர். நாக்பூர் மக்கள் இதற்கு முன்பு இப்படி ஒரு சூழலை தங்கள் வாழ்நாளில் எதிர்கொண்டதே இல்லை என தெரிவித்தனர். தற்போது ஔவுரங்கசீப் கல்லறையை சுற்றி 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.