மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் #SitaramYechury காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை கடந்த ஒரு சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்தது.
கடந்த 20 நாள்களுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.
சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினர் ஆந்திர மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். சீதாராம் யெச்சூரி 1952-ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஆந்திரா மற்றும் டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்ஏ முடித்த யெச்சூரி அவசர நிலை பிரகடனத்தின் போது கைது செய்யப்பட்டார்.
1974-ம் ஆண்டு மாணவர் கூட்டமைப்பில் சேர்ந்த யெச்சூரி, 1975ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். படிப்படியாக முன்னேறி, கட்சியின் பொதுச்செயலராக உயர்ந்தார்.
உடல்நிலை பாதித்திருந்தபோதும், தொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்வு செய்யப்பட்ட யெச்சூரி, தொடர்ந்து மூன்று முறை பொதுச் செயலராக தேர்வுசெய்யப்பட்டு மறையும் வரை அந்தப் பொறுப்பை வகித்துள்ளார்.