For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை - இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்!

07:48 AM Jul 10, 2024 IST | Web Editor
ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை   இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்ட சென்னை ஆணையர் அருண்
Advertisement

சென்னை பெருநகரம் முழுவதும் குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Advertisement

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை
செய்யப்பட்டதன் எதிரொலியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருணை, சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

சென்னை கமிஷனராக பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றங்களை தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பதில் அளிக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பதவியேற்ற உடன் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் மற்றும் உளவுத்துறை இணை கமிஷனர் தர்மராஜ், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுடன் ரவுடிகளை ஒடுக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில்,”சென்னை பெருநகர் முழுவதும் குற்றங்களில் ஈடுபட்ட  6 ஆயிரம் குற்றவாளிகள் குறித்த முழு விபரங்களை 2 நாட்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும். கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளில் 700 பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களின் முழு குற்ற விபரங்களையும் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள், திருடர்கள் என 6 ஆயிரம் குற்றவாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, அவர்கள் தற்போது அங்கு வசிக்கிறார்களா என்று உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்கள் வசிக்க வில்லை என்றால், எங்கு இருக்கிறார்கள் என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் துணை கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காவல் நிலைய எல்லையில் கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடப்பதற்கு முன் சம்பந்தபட்ட குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர்கள் கைது செய்ய வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளுடன் நேரடியாவும், ரகசியமாகவும் தொடர்பில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரையிலான பட்டியலை உளவுத்துறை அளிக்க வேண்டும். மேலும், மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை அதிகாகரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement