"வரக்கூடிய தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர்" - இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் திருமாவளவன் எம்பி பேச்சு!
"வரக்கூடிய தேர்தல் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயான போர்" - இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைபயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கி 63 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம் 14 மாநிலங்களை கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவுற்றதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் நிறைவையொட்டி, மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை (மார்ச் 17) கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் என்பதால் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பேசிய விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்ததாவது..
“ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தின் இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்திருக்கிறார். அம்பேத்கர் மற்றும் ஜோதிராவ் பூலே ஆகியோரின் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான யாத்திரையை நிறைவு செய்திருக்கிறார் ராகுல் காந்தி. அவர் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்திருக்கிறார்.
இந்த பயணம் எதற்காக எனில் பாசிச எண்ணங்கள் கொண்டவரிடம் இருந்து நாட்டையும் அரசியலமைப்புச் சாசனத்தையும் காப்பதற்காகத்தான். இந்த பிரச்சாரத்தில் அவருக்கு என தனிப்பட்ட திட்டங்கள் ஏதுமில்லை. மாறாக அவருடைய வாழ்க்கையை இந்திய மக்களுக்காக அவர் அர்ப்பணித்துள்ளார்.
இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இது சாதாரண தேர்தல் அல்ல மிகவும் முக்கியமான தேர்தல். இரு சித்தாந்தங்களுக்கிடையே நடக்க கூடிய மிகப்பெரிய போர். இந்தியா கூட்டணியில் தற்போது 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளோம். நாங்கள் அனைவரும் எங்கள் கையை ராகுல் காந்திக்கு தருகிறோம். இந்தியாவை பாதுகாப்பதற்காக, அரசியலமைப்பை காப்பதற்காக பாஜகவை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
குடியுரிமை திருத்த சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்றவை அரசியலமைப்புக்கு எதிரானது அதை பாஜக செய்துவருகிறது. அரசியல் சாசனமே அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது .நாங்கள் அனைவரும் ராகுல் காந்தி உடன் இருக்கிறோம் இந்தியாவை காப்பதற்காக ராகுலுடன் இருப்போம்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.