கல்லூரி மாணவி மரணம்...உடலைத் தோண்டி உடற்கூராய்வு - காதலை கைவிடச்சொல்லி அண்ணன் கொலை செய்தது அம்பலம்!
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த வருவாய் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி. கூலி வேலை செய்து வரும் இவர் தனது மனைவி தங்கமணி மகன் சரவணன் மற்றும் மகள் வித்யா உடன் வசித்து வருகிறார். இவரது மகள் வித்யா (வயது.22) கோவை அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். திருப்பூர் விஜயாபுரம் பகுதியை சேர்ந்த வெண்மணி என்பவரை வித்யா காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் விவரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 30 ஆம் தேதி தண்டபாணி மற்றும் அவரது மனைவி இருவரும் சர்ச்-க்கு பிராத்தனை செய்ய வெளியே சென்றதாகவும் மகன் சரவணனும் வெளியே சென்று விட்டதாகவும் திரும்பி சென்று பார்த்த போது வீட்டில் தனியாக இருந்த வித்யா மீது பீரோ விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வித்யாவின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வித்யா இறந்ததை உறுதி செய்து விட்டு சென்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் குடும்பத்தினர்
வித்யா உடலை இடுகாட்டில் அடக்கம் செய்தனர். இது தொடர்பாக தகவல் அறிந்த பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை செய்ய வேண்டும் என காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பல்லடம் வட்டாட்சியர் சபரி கிரி தலைமையில் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் வித்யாவின் உடலை தோண்டி எடுத்து இடுகாட்டிலேயே வைத்து பிரத பரிசோதனை செய்தனர். இதில் வித்யா தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல்
பாகங்களை சோதனைக்காக மருத்துவர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பிரேத பரிசோதனை முடிந்த பின் வித்யாவின் தந்தை தண்டபாணி மற்றும் அண்ணன் சரவணன் இருவரையும் விசாரணைக்காக காமநாயக்கன்பாளையம்
போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பீரோ விழுந்ததால் வித்யாவின் தலையில் காயம் ஏற்பட்டதா? அல்லது தாக்கி கொலை
செய்யப்பட்டாரா? என்பதை கண்டறிய உடற்கூராய்வு நடந்து வந்த நிலையில், அண்ணனே இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இது குறித்து திருப்பூர் எஸ்.பி. கிரிஷ் யாதவ், கல்லூரி மாணவி கொலை வழக்கில் வித்யாவை நன்றாக படிக்குமாறு அண்ணன் சரவணன் தெரிவித்து வந்ததாகவும் அதனால் அண்ணனுடன் கடந்த இரண்டு மாதமாக வித்யா பேசவில்லை எனவும் இந்நிலையில் காதலை கைவிட்டு படிக்குமாறு தெரிவித்தபோது வித்யா மறுத்து பேசியதால் ஆத்திரமடைந்த சரவணன் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். கொலை நடந்த சமயத்தில் பெற்றோர் வெளியே இருந்தது உறுதியாகியுள்ளது எனத் தகவல் தெரிவித்துள்ளார்.