கோவை பட்டியலின இளைஞர் கொலை: 10 பேருக்கு இரட்டை ஆயுள், 2 பேருக்கு ஆயுள் தண்டனை!
கோவையில் கடந்த 2016ல் பட்டியல் இன இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சோலைராஜன் என்பவரது மகன் தாமரைச்செல்வன் (23). டிப்ளமோ படிப்பை முடித்த தாமரைச்செல்வனுக்கு பிரசாந்த் என்ற தம்பி உள்ளார். தாமரைச்செல்வனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பு இளைஞர்களுக்கும் இடையே பள்ளியிலிருந்தே தகராறு இருந்து வந்ததோடு, கிரிக்கெட் விளையாடும் போதும் அடிக்கடி தகராறு, மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே பிரசாந்த் தனது நண்பர் ரமேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, வழிமறித்த டைல்ஸ் கார்த்திக் மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் பிரசாந்த் மற்றும் ரமேஷின் சாதி பெயரை கூறி இழிவாக பேசியதோடு, டைல்ஸ் கார்த்திக் தனது தலையால் பிராசந்தின் தலையை முட்டி எச்சரித்து அனுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் தனது அண்ணன் தாமரைச்செல்வனிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து தாமரைச்செல்வன் மற்றும் பிரசாந்த் ஆகிய இருவரும் நேரில் சென்று டைல்ஸ் கார்த்திக் மற்றும் தோப்பு மகேந்திரனை அடித்து கண்டித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த டைல்ஸ் கார்த்திக் மற்றும் தோப்பு மகேந்திரன் ஆகிய இருவரும் தங்களுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பர்களை இணைத்துக் கொண்டு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சின்ராஜ் நகர் புற்றுகண் மாரியம்மன் கோயில் அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த தாமரைச்செல்வன் மற்றும் பிரசாந்த், ஜெகதீஷ் ஆகிய மூவரையும் பயங்கர ஆயுதங்களுடன் சூழ்ந்துள்ளனர்.
தொடர்ந்து மூவரையும் கத்தியால் குத்திய கும்பல், தாமரைச்செல்வனை விரட்டி சென்றுள்ளது. தாமரைச்செல்வன் அங்கிருந்த மனோஜ் குமார் என்பவரது வீட்டுக்குள் புகுந்து தாளிட்டு கொண்ட நிலையில், கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், உள்ளே இருந்த தாமரைச்செல்வன் சரமாரியாக தாக்கி வெளியில் இழுத்து வந்துள்ளது. பிறகு தாங்கள் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாமரைச்செல்வனை வெட்டிய அந்த கும்பல், உலக்கையை எடுத்து கடுமையாகத் தாக்கி, கல்லை தலையில் போட்டு கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 பேர் கொண்ட கும்பலை ரத்தினபுரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரத்தினபுரி பகுதியை சேர்ந்த தல விக்கி, தோப்பு மகேந்திரன், டிப்ஸ் கார்த்திக், கவாஸ்கான், டைல் சுரேஷ் , பிரகாஷ் , நண்டு நவீன், விமல், ஒன்றரை கௌதம், கலைவாணன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கிறிஸ்டோபர் மற்றும் கருப்பு கௌதம் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் ஜாமீனில் இருந்த நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். குற்றவாளிகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றம் நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் 12 பேருக்கு ஆயுள் மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கபட்டிருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்ரறை கௌதம் ஏ ப்ளஸ் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர் என்பதோடு, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் பல்வேறு கொலை குற்றங்கள் மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.