#HeavyRain | தண்டவாளத்தில் விழுந்த ராட்சத பாறை... மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் சேவை இன்று ரத்து!
மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதால் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று (நவ.3) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (நவ.2)
இரவு மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மேட்டுப்பாளையம் மற்றும் கல்லார் உள்ளிட்ட மலை ரயில் பாதை அமைந்துள்ள இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும், மரங்கள் முறிந்து விழுந்தன.
அதே நேரத்தில், மலை ரயில் பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து தண்டவாளங்கள் சேதடைந்தன. ரயில் பாதையில், 3 இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. இதன் காரணமாக, மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை இன்று (நவ.3) ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேதமடைந்த மலை ரயில் தண்டவாளங்களை சீரமைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஊழியர்கள் தண்டவாளங்களை சரிசெய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்தவுடன் மீண்டும் மலை ரயில் சேவை வழக்கம்போல் செயல்படும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.