"கூட்டணி ஆட்சி நடத்துவது நரேந்திர மோடியின் பலம் அல்ல" - சஞ்சய் ராவத் பேட்டி
கூட்டணி ஆட்சி நடத்துவது நரேந்திர மோடியின் பலம் அல்ல என சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இதில் பாஜகவுக்கு மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் தனித்து கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை பாஜகவுக்கு உள்ளது. இதையடுத்து, தனது ராஜினாமா மற்றும் அமைச்சரவையை கலைப்பது தொடர்பான கடிதங்களை, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பிரதமர் மோடி வழங்கினார்.
இந்த ராஜினாமாவை ஏற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அடுத்த அரசு உருவாகும் வரை காபந்து பிரதமராக மோடி தொடர வேண்டுகோள் விடுத்தார். வரும் 8ம் தேதி நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த நிலையில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "கூட்டணி ஆட்சி நடத்துவது நரேந்திர மோடியின் பலம் அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாஜகவுக்கு எங்கே பெரும்பான்மை இருக்கிறது? அவர்கள் இப்போது கூட்டணி வைக்க முயற்சிக்கிறார்கள். அவர்கள் முயற்சி செய்யட்டும். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் அனைவரின் நண்பர்கள். அவர்கள் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை" என்று தெரிவித்தார்.