For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் - அரசாணை வெளியீடு!

07:54 AM Feb 25, 2024 IST | Web Editor
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்   அரசாணை வெளியீடு
Advertisement

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி – 134 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா தடுமாற்றம்!

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி பார்வையிட்டு, வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார்.

அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.160.42 கோடி நிவாரணம் வழங்கிடவும், 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 41.24 கோடி நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது”

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement