தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்யும் 11 நிறுவனங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 11 நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முதலீடுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பல்வேறு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாநாடு தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார். அதன்பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்து உரையாற்றினார்.
இதையும் படியுங்கள் : உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து.!
இந்த நிகழ்வில் மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசை வழங்கினார். இந்த மாநாட்டில் தொழில்கள் அடிப்படையிலான பல்வேறு தனித்தனி அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஜவுளி, காலணி தொழில்கள், மின்சார வாகனங்கள் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் 2 நாட்களும் நடத்தப்பட உள்ளன.இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 11 நிறுவனத்துடன் முதலமைச்சர் முன்னிலையில் கையொப்பம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் நிறுவனங்கள்:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனத்துடன் ரூ. 6,000 கோடி முதலீடுக்கான கையொப்பம் ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1,100 கோடி முதலீடுக்கான கையொப்பம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் ரூ.177 கோடி முதலீடுக்கான கையொப்பம் செய்யபட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, 1,600 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சோலார் தயாரிப்பு (First solar) நிறுவனத்துடன் ரூ. 2,500 கோடி முதலீடுக்கான கையொப்பம் செய்யப்பட்டுள்ளது. அதன் முலம் முதற்கட்டமாக 350 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சோலார் தயாரிப்பு நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.5,600 கோடி முதலீடுக்கான கையொப்பம் செய்யபட்டுள்ளது.
கோத்ரேஜ் நிறுவனத்துடன் ரூ. 515 கோடி முதலீடு செய்யப்பட்டது. இதனால், 446 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ரூ.12,082 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்பட உள்ளது.
பெகாட்ரான் நிறுவனம் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதால் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. JSW நிறுவனம் தூத்துக்குடியில் ரூ. 12,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் டிவிஎஸ் நிறுவனம் 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
வியட்நாமை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.16,000 கோடி முதலீட்டில் வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைக்க உள்ளது. இதன் மூலம் 3 ஆயிரத்து 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.