"போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது!" - தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் #MKStalin உரை!
போதைப் பொருள் ஒழிப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தென் மாநில காவல்துறை இயக்குநர்கள், படைத்தலைவர்கள் பங்கேற்ற தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு சென்னை கிண்டியில் இன்று (19.10.2024) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் ஆகிய மாநில காவல்துறை இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது :
சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு, நீர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் தென் மாநிலங்களைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். மிக முக்கிய பிரச்னைகளான போதைப் பொருட்கள், தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச்செயல்கள் போன்ற குற்றச்சம்பவங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் கூடியிருக்கிறோம்.
தமிழ்நாடு அரசும், காவல்துறையும் போதைப் பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். போதைப் பொருள் விநியோகம், விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகள் காரணமாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.இதற்கு நாங்கள் 2 வியூகங்களை கையாண்டு வருகிறோம்.
1) கைது மட்டுமல்லாது, சொத்துப் பறிமுதல், வங்கிக் கணக்கு முடக்கம், கடைகளுக்கு சீல், கடுமையான அபராதம், கடும் சிறை தண்டனை உள்ளிட்ட தீவிர சட்ட அமலாக்கம் மூலமாக போதைப் பொருளை ஒழிக்கிறோம்.
2) போதைப் பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுப்பது.
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதைத் தடுக்க, தமிழ்நாடு காவல்துறையும், அண்டை மாநில காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இணையவழி குற்றங்களை தடுக்கவும் நாம் இணைந்து செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம். வெளிநாட்டில் வேலை தேடும், இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக கணினி சார் குற்றங்களில் ஈடுபடுத்தும் ‘சைபர் Slavery’ பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.
இதனால் நம்ம இளைஞர்கள் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற அச்சுறுத்தல்களைத் தடுக்க நமக்குள் உள்ள ஒருங்கிணைப்பை பலப்படுத்த வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதம் உள்ளிட்டவைக் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டும். எந்தவித தீவிரவாதம், பயங்கரவாதமாக இருந்தாலும் அவற்றைக் கட்டுப்படுத்தி தடுக்க முழு ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் பலப்படுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள் : “சமூகநீதி குறித்து பேசவோ, தொழிலாளர் உரிமை குறித்து முழங்கவோ திமுகவுக்கு எந்த உரிமையும் இல்லை” – ராமதாஸ் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் கூட அப்படி ஒரு முயற்சியை மேற்கொண்ட போது ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொண்டோம். சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய வதந்திகளைப் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து, ஒருங்கிணைந்து மக்களின் பாதுப்பை உறுதி செய்ய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.