‘மூடா’ ஊழல் புகார் - #Siddaramaiah மீதான நடவடிக்கையை நிறுத்தி வைத்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஆளுநரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
கர்நாடகாவில் மூடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உள்ளது. இந்த வாரியம் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்ததாகவும் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்தன. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அம்மாநில ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சித்தராமையா இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார். தனது அரசியல் வாழ்கையில் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக ஒருபோதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதில்லை எனவும், அமைச்சராக இருந்த போதும் இப்போது முதலமைச்சராக இருக்கும் போதும் தனிப்பட்ட தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்திருந்த நிலையில், அதனை எதிர்த்தே கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (ஆக. 19) காலை அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். முன்னதாக சித்தராமையா தனது ட்விட்டரில் ஆளுநரின் முடிவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும் ட்வீட் செய்திருந்தார். மேலும், எந்தவொரு தவறும் செய்யாததால் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், ஆளுநரின் அனுமதிக்கு எதிரான மனு விசாரணைக்கு வரும்வரை மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மீதான நடவடிக்கையை கர்நாடக உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.