சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு - ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகிற 25-ந் தேதி ஒடிசா, மேற்கு வங்காள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே நள்ளிரவு முதல் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், அதிகாலை பணிக்கு சென்ற தூய்மை பணியாளர் வரலட்சுமி (30) கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர் வரலட்சுமிக்கு ஒரு மகள், ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். வரலட்சுமியின் இறப்பை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சர வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும் , தனியார் நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்குகிறார்.