“பாலியல் வழக்கில் #NivinPauly-க்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை!” க்ளீன் சீட் வழங்கிய காவல்துறை!
நடிகர் நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரில் போதிய ஆதாரங்கள் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் தவறான நடத்தை பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகத்தை உலுக்கியது.
இதையடுத்து பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பல நடிகைகள் புகாரளிக்க, சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் நிவின் பாலியின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வெளிநாட்டில் பட வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பாலியல் ரீதியாகத் தன்னை துன்புறுத்தினார் என நேரியமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டின் பேரில் பதியப்பட்ட வழக்கு, தொடர்ந்து விசாரணை சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு நடிகர் நிவின் பாலி மறுப்பு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து அந்த பெண் குற்றம் சாட்டிய குறிப்பிட்ட நாளில் அவர் கொச்சியில் தங்கி இருந்ததற்கான விடுதி ரசீதையும் நிவின் பாலி தரப்பு வெளியிட்டிருந்தது. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தன்னை நிவின் பாலி பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் நாளன்று நிவின் பாலி துபாயில் இல்லை. அவர் கேரளாவில் இருந்ததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டன. நிவின் பாலி டிசம்பர் 14ஆம் தேதி மதியம் முதல் அடுத்த நாள் (டிசம்பர் 15ஆம் தேதி) மாலை கொச்சியில் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் டிச.14,15 2023 அன்று நடிகர் நிவின் பாலி கேரளத்தில் இருந்ததை காவல்துறை உறுதி செய்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக நிவின் பாலிக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லையென கொத்தமங்கலம் நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கையைச் சமர்பித்துள்ளது. இதனால், நிவின் பாலிக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார் போலி என உறுதியாகியுள்ளது.