இந்தியாவுடனான மோதல்: சுற்றுலாத்துறையில் 33% வீழ்ச்சி கண்ட மாலத்தீவு!
இந்தியா - மாலத்தீவுகளுக்கு இடையேயான மோதல் காரணமாக மாலத்தீவிற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 33% வீழ்ச்சி அடைந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சமீபத்தில் சென்று வந்த பிரதமர் மோடி, அவரது அனுபவங்களை தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவு செய்தார். மாலத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவின் முயற்சி இருப்பதாக பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து, பிரதமரின் லட்சத்தீவு பயணத்தை முன் வைத்து, மாலத்தீவு அமைச்சர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவர்கள் சிலர் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனர்.
மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது இந்தியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், பலரும் மாலத்தீவுக்கு எதிரான பிரசாரங்களைச் சமூக வலைதளங்களில் முன்வைத்தனர். மாலத்தீவுக்கு மாற்றான சுற்றுலாத்தலமாக லட்சத்தீவைக் குறிப்பிட்டனர். இதனால், பலர் தங்களின் மாலத்தீவு பயணத்தையும் ரத்து செய்தனர்.
இதனிடையே, இந்திய சுற்றுலா பயணிகள் வருகை மாலத்தீவில் கடுமையாக சரிந்துள்ளது. மாலத்தீவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் முதலிடத்தில் ரஷ்யாவும், 2-வது இடத்தில் இத்தாலியும், 3-வது இடத்தில் சீனாவும், 4-வது இடத்தில் பிரிட்டனும், 5-வது இடத்தில் இந்தியாவும் உள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் இதே தேதி வரை, 41,000க்கும் மேற்பட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கு வந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு எண்ணிக்கை 27,224 ஆகக் குறைந்துள்ளதாகவும், இது 33% சரிவைக் காட்டுவதாகவும் மாலத்தீவு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவுடனான மோதலே இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், இது லட்சத்தீவுகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளை தூண்டுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் இதே வேளையில், சீனாவில் இருந்து மாலத்தீவுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் மொத்தம் 217,394 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். சீனாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான உறவுகள் வலுவடைந்ததால், அவர்களில் 34,600க்கும் மேற்பட்டவர்கள் சீனாவிலிருந்து வந்துள்ளனர்.
2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் மாலத்தீவின் சிறந்த சுற்றுலா சந்தையாக இந்தியா இருந்தது மற்றும் ஆண்டுக்கு 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து மாலத்தீவிற்கு சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.