கங்கனாவின் கன்னத்தில் "கை" வைத்த சிஐஎஸ்எப் பெண் காவலர் - யார் இந்த குல்விந்தர் கவுர்?
சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர் குல்விந்தர் கவுர் குறித்த தேடல் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. யார் அவர்?
நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவு கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றன. இதனையடுத்து நாளை மறுநாள் (ஜூன் 9) மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இதுதொடர்பாக இன்று டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மண்டி தொகுதியின் பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரனாவத் நேற்று (ஜூன் 6) சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கங்கனாவுக்கும், அங்கிருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை பெண் காவலருக்கும் திடீர் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது திடீரென அந்த பெண் காவலர் நடிகை கங்கனாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கங்கனாவும் பதிலுக்கு அந்த பெண் காவலரை அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கங்கனா ரனாவத் விஸ்தாரா விமானம் மூலம் மதியம் 3 மணிக்கு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் கங்கனா ரனாவத்தை அறைந்த விவகாரத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து குல்விந்தர் கவுர் கூறுகையில், “100 ரூபாய்க்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும் போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.
- குல்விந்தர் கவுர் 2009 இல் CISF இல் சேர்ந்தார். 2021 முதல் சண்டிகர் விமான நிலையத்தில் விமானப் பாதுகாப்புக் குழுவில் இருந்து வருகிறார்.
- 35 வயதான குல்விந்தர் கவுர் பஞ்சாபின் சுல்தான்பூர் லோதியை சேர்ந்தவர்.
- சண்டிகர் விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
- அவரது கணவரும் சிஐஎஸ்எஃப்-ல் பணிபுரிபவர்.
- அவரது சகோதரர், ஷேர் சிங், ஒரு விவசாயிகள் சங்க தலைவராகவும், கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின் அமைப்பு செயலாளராக உள்ளார்.
- குல்விந்தர் கவுருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
- அவருக்கு எதிராக இதுவரை விஜிலென்ஸ் விசாரணையோ அல்லது தண்டனையோ இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது கணவரும் அதே விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.