உலக அமைதி மற்றும் சமத்துவம் வேண்டி கிறிஸ்துமஸ் பேரணி - மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ தொடக்கி வைத்தார்!
உலக அமைதி மற்றும் சமத்துவத்திற்காக கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் பேரணியை மனோஜ்
பாண்டியன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஓரிரு நாட்களே உள்ள நிலையில் தென்காசி மாவட்டம்
ஆலங்குளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கி உள்ளது.
ஆலங்குளம் சுற்று வட்டார பகுதியில் 20க்கு மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள்
உள்ளது. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வீதிஎங்கும் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் நடனம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என
கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கி உள்ளது.ஆலங்குளம் தூய பேதுரு ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற உலக அமைதி மற்றும் சமத்துவத்திற்கான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் மக்கள் பேரணியை ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் சிலுவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் மற்றும் சபை மக்கள் ஆலங்குளத்தின் முக்கிய வீதியெங்கும் சுற்றி
வந்தனர். இதே போல் குருவன்கோட்டை தூய பேதுரு ஆலயத்தில் மேளதாளத்துடன் சிறுவர் சிறுமிகள் கிறிஸ்துமஸ் தாத்தா உடன் வீடு வீடாக சென்று முதியோர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானோருக்கு இனிப்பு வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.