கிறிஸ்துமஸ் - தென்காசியில் ‘கேக்’ விற்பனை படுஜோர்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி தென்காசியில் கேக் விற்பனை படுஜோரில் நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. பண்டிகையை வரவேற்கும் விதமாக கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் குடில், ஸ்டார் உள்ளிட்டவற்றை வைத்துள்ளனர். குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய இடம் பிடிப்பது கேக் தான்.
தேவாலயங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களிலும் 'கேக்' வெட்டி ஒருவருக்கொருவர் பரிமாறி தங்களது மகிழ்வை வெளிப்படுத்துவர். எனவே கிறிஸ்துமஸில் கேக் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதனையொட்டி தென்காசியில் பேக்கரிகளில் டன் கணக்கில் கேக்குகள் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில மணிநேரங்களே இருப்பதால், பேக்கரிகளில் கேக் விற்பனை சூடுபிடித்துள்ளது. குறிப்பாக பிளம் கேக் வகைகள் அதிகம் விற்பனையாகி வருகின்றன. இதுதவிர பிளாக் பாரஸ்ட், ட்ரீம் கேக், சாக்லேட் கேக், ஸ்ட்ராபெரி கேக், ப்ரூட் கேக், கீரிம் கேக் உள்பட பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 1கிலோ கேக் ரூ.480 முதல் 1200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.