வெறுப்பு அரசியலுக்கு எதிரானது கிறிஸ்தவம்! - திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து
வெறுப்பு அரசியலுக்கு எதிரானது கிறிஸ்தவம், சகோதரத்துத்துவத்தை வலுப்படுத்த கிறிஸ்துமஸ் பெருநாளில் உறுதியேற்போம் என விசிக தலைவர் திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதுஸ் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை(டிச.25) கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
"இயேசு பெருமான் பிறந்தநாளில் கிறிஸ்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயேசுவின் போதனைகள் வெறுப்பு அரசியலுக்கு எதிரானது. உயர்வு - தாழ்வு என்னும் பாகுபாட்டுக்கு எதிரானது. சாதி, மதம், மொழி, இனம், தேசம் போன்ற அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் சகோதரத்துவத்தால் இணைக்கக்கூடியது.
ஆகவே தான், கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவி இன்றும் வெற்றிகரமாக மனிதகுலத்தை வழிநடத்தி வருகிறது.
இயேசு சகோதரத்துவத்தின் அடையாளமாவார். எனவே அவரைப் போற்றுவது என்பது சகோதரத்துவத்தைப் போற்றுவதேயாகும்.
சகோதரத்துவம் தழைக்குமிடத்தில் தான் சனநாயகம் கோலோச்சும். சனநாயகமும் சமத்துவமும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ள வெவ்வேறு புள்ளிகளாகும். இவற்றுக்கு அடிப்படையானதொரு கருத்தியல் தான் சகோதரத்துவம். அத்தகைய சகோதரத்துவத்தை தமது உயிர்மூச்சாகக் கொண்டதே இயேசுவின் கிறிஸ்தவம் ஆகும்.
இத்தகு சிறப்புக்குரிய கிறிஸ்தவத்தை, உலகெங்கும் வாழும் மக்களுக்கு அருட்கொடையாக வழங்கியுள்ள மகத்தான பேராளுமையே இயேசு பெருமான் ஆவார். அவரை நினைவுகூர்ந்து இந்நாளில் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.
அதாவது, உலகமெங்கும் சகோதரத்துவத்தை மென்மேலும் வளர்த்தெடுக்கவும் வலுப்படுத்தவும் இந்த நன்னாளில் யாவரும் உறுதியேற்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் எனது மனம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்."
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.