சித்திரை திருவிழா: சுவாமி, அம்மன் வீதி உலா... பக்தர்கள் பரவசம்!
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முதல் நாள் மாலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது.
சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருச்சக வாகனத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தனர். முன்னதாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உள்ள குலாலர் மண்டகப்படியில் எழுந்தருளிய சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனைகள் காட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்மனும் திருக்கோயிலில் இருந்து புறப்பட்டு அம்மன் சன்னதி, தேரடி, விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, டி.எம்.கோர்ட், மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, யானைக்கல், கீழமாசி வீதி உள்ளிட்ட இடங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து திருக்கோயிலை வந்தடைந்தனர்.
சுவாமி, அம்மன் திருவீதி உலாவிற்கும் முன்னதாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிவன், பார்வதி, மீனாட்சி, முருகன், விநாயகர் உள்ளிட்ட கடவுள்கள் வேடமிட்டு ஊரவலமாக வந்தனர். நான்கு மாசி வீதிகளில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமியையும், அம்மனையும் மனமுருக தரிசனம் செய்தனர். நான்கு மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் திருவீதி உலாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.