சித்திரைத் திருவிழா - மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை திருவிழா. மதுரை மட்டுமல்லாமல் தென் மாவட்ட மக்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்று சித்திரை திருவிழா.
இதில் முக்கிய நிகழ்ச்சிகளாக பார்க்கப்படும் மீனாட்சிக் திருக்கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான்.
இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் 28ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள் வரும் மே 12 ஆம் தேதி வைகை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் காண்பதற்காக 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று கூடுவார்கள்.
மக்களின் வசதிக்காக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளக் கூடிய மே 12 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் மே 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு கட்டும் விதமாக பின்னர் வரக்கூடிய ஒரு நாள் பணி நாளாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.